எனது வாழ்நாளில் இதனை காணவே நான் காத்திருந்தேன் என சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் இறுதியாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய வெளிவிவகார துறை அமைச்சர், டெல்லி முன்னாள் முதல் அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் (வயது 67) உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். கடந்த பா.ஜ.க. ஆட்சியில் வெளிவிவகார துறை அமைச்சராக இருந்தபொழுது, வெளிநாட்டில் சிக்கி தவித்த இந்தியர்கள் பலரை மீட்க பேருதவியாக செயல்பட்டவர். அவர் தனது டுவிட்டர் பக்கத்திலும் செய்திகளை வெளியிட்டு வந்துள்ளார்.
ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது என்ற பிரதமர் மோடி அரசின் அறிவிப்பினை அவர் வரவேற்றார். இதுபற்றி அவர்
“ஒரு தைரியமான மற்றும் வரலாற்று முடிவு. நம்முடைய கிரேட் இந்தியாவுக்கு – ஒரே இந்தியாவுக்கு வணக்கம் செலுத்துவோம் ” என கூறினார்.
இந்த நிலையில் நேற்று மாலை அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடிஜிக்கு எனது நன்றி. எனது வாழ்நாளில் இதனை காணவே நான் காத்திருந்தேன் என்று தெரிவித்து உள்ளார். இதுவே அவரது இறுதி டுவிட்டாக அமைந்துள்ளது.
இந்த டுவிட்டர் பதிவில் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் அவரது ஆதரவாளர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை அதிர்ச்சியிலும், வருத்தத்திலும் ஆழ்த்தியது. காஷ்மீர் பற்றிய அவரது 2வது டுவிட்டர் பதிவு இதுவாகும்.
இதற்கு முன் கடந்த திங்கட்கிழமை, நாடாளுமன்ற மேலவையில் காஷ்மீர் பற்றிய பிரேரணைகள் நிறைவேறிய பின் அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நாடாளுமன்ற மேலவையில் தனித்துவமுடன் செயல்பட்டதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜிக்கு எனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க