ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் விலகுவது தொடர்பான சமாதான பேச்சுவார்த்தைகளில் முரண்பாடுகள் தீர்க்கப்பட்டதாக தலிபான் கூறுகிறது.
கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது.
கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையினரில் 5,000 பேரை திரும்பப் பெறுவது தொடர்பான அமெரிக்காவின் திட்டத்துக்கு தலிபான்கள் சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், மற்ற தீவிரவாத அமைப்புகள் உடனான உறவை துண்டிக்க தலிபான்கள் சம்மதித்துள்ளனர்.
இது தொடர்பாக தலிபான் ஊடக பேச்சாளர் சுஹைல் ஷாகீன் கூறுகையில்,“அமெரிக்கா- தலிபான் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
விடுபட்ட பிரச்சினைகள் குறித்து கலந்து ஆலோசிக்கிறோம். அமைதி ஒப்பந்தம் பற்றி பிறகு அறிவிக்கப்படும்,’’ என்றார்.
நியூயோர்க் நகரின் இரட்டை கோபுரத்தை அல் கொய்தா தீவிரவாதிகள் கடந்த 2001ம் ஆண்டு தகர்த்தனர். இதைத் தொடர்ந்து அல் கொய்தா தீவிரவாதிகள் வேட்டை தொடங்கியது.
தலிபான்கள் அல் கொய்தாவுக்கு புகலிடம் அளித்தது ஆகியவற்றின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தது. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க ஆதரவுடன் அமைக்கப்பட்ட அரசுப் படைகள் மற்றும் அமெரிக்கர்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க