வெளிநாட்டு செய்திகள்

ஹோங்கொங்கில் போராட்டம்: முடங்கியது விமான சேவைகள்

ஹோங்கொங்கில் 5 இலட்சம் பேர் பங்கேற்ற போராட்டத்தால் விமான சேவை முடங்கியது மேலும் 230 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஹோங்கொங்கில் குற்றவியல் வழக்கு விசாரணைகளுக்கு உட்படுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹோங்கொங் நிர்வாகம் முடிவு செய்தது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் மாதம் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்நிலையில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதா நிறுத்திவைக்கப்படுவதாக ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்தார்.

எனினும் இதனால் சமரசம் ஆகாத போராட்டக் காரர்கள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் விமான நிலையங்களுக்கு செல்லும் முக்கிய வீதிகளை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்தனர்.

இதனால் விமான நிலையங்களில் பணிகள் பாதிக்கப்பட்டு விமான சேவை முடங்கியதோடு 230 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

போராட்டம் காரணமாக வீதிகள் , தொடருந்து, விமானம் என அனைத்து வகையான போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டதால் ஹோங்கொங்கில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பஸ் சாரதிகள் என பல தரப்பினர் கை கோர்த்ததாகவும், ஒட்டுமொத்தமாக சுமார் 5 லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்றதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க