உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

‘ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்’ !

அரசியல் ரீதியாக வங்குரோத்து அடைந்தவர்களே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என கூக்குரல் இடுவதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த ஆட்சியில் மாகாணசபைத் தேர்தல்களை வெவ்வேறு கட்டம் கட்டமாக நடத்தி சர்வாதிகார நடைமுறை பின்பற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான செயற்பாடு ஜனநாயக விழுமியங்களுக்கு முற்றிலும் விரோதமானது என கூறியுள்ள அவர் அவ்வாறான ஜனநாயக விரோதிகளே தற்போது மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என துடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் அவர்களின் அரசியல் வங்குரோத்து நிலைமை நன்றாக புலப்படுவதாகவும், ஒன்பது மாகாண சபைகளின் தேர்தல்களும் ஒரே தினத்தில் நடைபெற வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் கூறினார்.

இதுவரை ஊவா மாகாணசபை தவிர ஏனைய 8 மாகாண சபைகளும் கலைக்கப்பட்டுள்ள நிலையில், மாகாண சபை தேர்தல்கள் அனைத்தும் ஒரே தடவையில் நடக்க வேண்டும் என கூறுவது தெளிவான அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே தற்போதைய சூழலில் ஜனாதிபதி தேர்தல் முக்கியமானதாய் இருப்பதால் அதனை நடத்துவதே ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் செயற்பாடாக அமையும் எனவும் அரவிந்த குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனைவிடுத்து முன்னைய ஆட்சியை போன்று கட்டம் கட்டமாக தேர்தலை நடத்தி மாகாண சபையை கைப்பற்றிய மோசமான நிலைமைக்கு மீண்டும் செல்ல முடியாது எனவும், அவ்வாறு நடந்தால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க