உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை முன்பாக மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த வருடம் மார்கழி மாதம் 21ஆம் திகதி இரவு பெய்த கடும் மழைகாரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சுமார் 5000 க்கு மேற்பட்ட பயனாளிகளுக்கான விசேடமாக வீட்டுத் திட்டங்களை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக சுமார் ஏழு லட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான வீடமைப்பு திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

இதன் அடிப்படையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட வீடுகளுக்கான முதலாம் கட்ட கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு மக்கள் வீட்டினுடைய வேலைகளை ஆரம்பித்து வீட்டினுடைய வேலைகள் பலவற்றை செய்த போதும் அடுத்த அடுத்த கட்ட நிதிகள் வழங்கப்படவில்லை என்பது முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது

அந்த வகையிலே இதனுடைய பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இந்துபுரம் திருமுறிகண்டி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இன்றைய தினம்(30) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை முல்லைத்தீவு மாவட்ட காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்

இன்று காலை எட்டு மணியளவில் மாங்குளத்தில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உடைய முல்லைத்தீவு மாவட்ட காரியாலயத்திற்கு முன்பாக குறித்த போராட்டத்தை நடத்துவதற்காக ஒன்று கூடியுள்ளனர்.

குறித்த பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள போதும் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட கொடுப்பனவுகள் வழங்கப்படாததால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து இருப்பதாக தெரிவித்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்து இருந்தனர்

குறித்த வீட்டுத் திட்டங்களுக்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் சீமெந்து பைகள் வழங்கப்பட்டதாகவும் குறித்த வீட்டுக்கான நிதிகள் தங்களுக்கு வழங்கப்படாமையால் குறித்த சீமெந்து பைகள் பாவனைக்கு உதவாத வகையில் சென்றுள்ளதாகவும் இவ்வாறு பல்வேறு சிரமங்களை தாங்கள் எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எதிர்வரும் மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் தங்களுக்கு ஒரு உறுதியான பதில் தரவேண்டும் எனவும் அவ்வாறு தவறும் பட்சத்தில் ஆறாம் திகதி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை முல்லைத்தீவு மாவட்ட காரியாலயத்தை பூட்டி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்து அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றுள்ளனர்

இதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கணக்காளர் அவர்களும் ஒத்துக் கொண்டு தாங்கள் 5ஆம் திகதிக்கு முன்னர் ஒரு தீர்க்கமான முடிவினை தருவதாக தெரிவித்திருந்தார்.

குறித்த போராட்டத்தில் மாங்குளம் பொலிசார் பலரும் வருவிக்கப்பட்டிருந்ததோடு புலனாய்வாளர்கள் பலரும் அந்த இடத்தில் வருகைதந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

கருத்து தெரிவிக்க