ஒரு பலமான அமைப்பான ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளியாக நாம் இருக்கும்போது, அது ஜனாதிபதி வேட்பாளராக யாரை தீர்மானிக்கிறதோ அதற்கு நாம் இணங்கிப் போகவேண்டிய ஒரு தார்மீகத்தன்மை உள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சகர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஐ.தே .முன்னணி வெற்றி பெரும் வேட்பாளரை ஒருவரையே களம் இறக்கும் என நாம் திடசங்கற்பம் கொண்டுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சகர் பழனி திகாம்பரம் (27.9.2019) அன்று தெரிவித்தார்.
கண்டி விவேகானந்தா தமிழ் மஹாவித்தியாலயத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின் ஊடக வியலாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது-.
வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்யும் வகையில் பிரதமரும் அமைச்சர் சஜித் பிரேமதாசாவும் புரிந்துணர்வுடன் தேர்தல் பயணத்தை முன்னெடுத்துச் செல்வார்களாயின் அது சிறப்பாக இருப்பது மட்டுமன்றி, வெற்றி பெரும் வாய்ப்புகளை மிக எளிதாக்கும். மாறாக கருத்து முரண்பாடுகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டால் வெற்றி பெறுவது தூரமாகிக் கொண்டு செல்லும்.
ஆகவே அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்படக்கூடிய ஒரு நிலைமையை கட்சிக்குள் தக்கவைத்துக் கொள்வது காலத்தின் கட்டாயத்தேவையாக இருப்பதாக கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் சொல்லிவைக்க விரும்புகின்றேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சஜித் பிரேமதாச உண்மையில் சிறந்த வேட்பாளர் கட்சிக்குள் அவர் இருக்க வேண்டும். அதே நேரம் வேட்பாளராக யார் இருக்க வேண்டும் என்று எம்மால் சொல்லமுடியாது.
ஐ தே கட்சி ஒரு பலத்த கட்சியாக இருக்கின்றது. ஆகவே அவர்களே அதனைத் தீர்மானிக்க வேண்டும். அத்தீர்மானத்திற்கு நாம் இணக்கம் தெரிவிப்போம்.
மேலும் இதுவரை வேறு பிரதான கட்சிகள் ஏதும் தமக்கு ஆதரவு தரும்படி எமக்கு அழைப்பு விடுக்க வில்லை. ஐக்கிய தேசியக்கட்சிக்குள் இருக்கும் நாம் எவ்வாறு வேறுகட்சிக்குள் செல்வது? என ஊடகவியாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க