கன்னியா ஆடி அமாவாசைத் தீர்த்த நிகழ்வு தொடர்பான விசேட கூட்டம் (27.07.2019) நேற்று இடம்பெற்றது.
குறித்த கூட்டம் திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மாவட்டச் செயலாளர் திரு புஸ்பகுமார, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் அவர்களின் பிரதிநிதி திரு குகதாசன், திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து விகாரைகளினதும் பிரதான துறவிகள், சர்வ மத அமைப்பின் பிரதிநிதி குரு அப்புக்குருக்கள் உள்ளிட்ட ஊடகவியலாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.
காலை 10.30 மணிக்கு ஆரம்பமான இவ்வுரையாடலில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அதாவது, 1.31.07.2019 ஆடி அமாவாசைத் தீர்த்த நிகழ்வு வழமை போல நடைபெறும்.
2. அன்று சிங்கள மக்களின் தனி நிகழ்வு நடைபெறாது.
3. அதிகாரிகளும், துறவிகளும் ஆலயத்தில் நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொள்வர் வழிபாட்டுக்குத் தடையில்லை.
மேலும், காவல் துறை வழமையான கடமையினைச் செய்யும் எனும் தீர்மானங்களுடன் மாலை 1.00 மணி அளவில் குறித்த கூட்டம் நிறைவடைந்தது.
கடந்த 16.07.2019 அன்று கன்னியாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பின் திருகோணமலை நகரத்தில் தமிழ் சிங்கள இனங்களுக்கிடையில் ஒரு முறுகல் நிலை காணப்பட்டது.
இதன் விளைவாக கன்னியா ஆலயத்தில்’ தொடர் பூசைக்கு சில தடங்கல்கள் ஏற்பட்டது. பின் நிர்வாக சபையின் முயற்சியால் பூசை சில நாட்கள் கடந்து வழமைக்குத் திரும்பியது.
அத்துடன் எதிர்வரும் 31.07.2019 புதன் கிழமையன்று கன்னியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆடி அமாவாசைத் தீர்த்தம் மற்றும் பிதுர் தர்ப்பண நிகழ்வு கடந்த ஆண்டு போல் நிகழுமா எனும் நிலை காணப்பட்டது.
ஏனெனில் குறித்த தினத்தில் 31.07.2019 கன்னியாவில் சிங்கள மக்கள் அனைவரையும் கூடுமாறு சமூகவலைத் தளத்தில் விடுக்கப்பட அழைப்பு, தமிழர் தரப்பும் வெளிமாவட்ட இளைஞர்களுடன் கன்னியாவில் கூடுவார்கள் என்ற தவறான தகவல் அனைவரிடத்திலும் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக மாவட்டச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு படையினர் இதில் கூடிய கவனம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க