உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மகாவலி தொடர்பான இரு நூல்கள் ஜனாதிபதி தலைமையில் வெளியீடு!

‘மஹாவலி – நல்லிணக்கத்தின் நதி’ மற்றும் ’95ன் பின்னர் மஹாவலி’ ஆகிய நூல்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று வெளியிடப்படவுள்ளன.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

1995ஆம் ஆண்டு முதல் 15 வருடங்களில் மஹாவலி வேலைத்திட்டத்தின் கீழான நடவடிக்கைகள் அடங்கியதாக இந்த நூல்கள் எழுதப்பட்டுள்ளன.

மத்திய மலைநாடு, ரஜரட்டை, வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு நீரினைக் கொண்டுசென்று ஆயிரக்கணக்கான சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் தாகத்தை தீர்க்கும் மகாவலி நதியின் பயணமே ‘மகாவலி – நல்லிணக்க நதி’ என்ற நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மகாவலி திட்டத்தில் பின்தங்கிய கட்டமாகக் காணப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கம் உள்ளிட்ட உலர்வலய மக்களின் கண்ணீர் கதையை நிறைவுக்குக் கொண்டுவந்த பாரிய நீர்ப்பாசன புரட்சி பற்றிய வரலாறே ’95ஆம் ஆண்டின் பின்னரான மகாவலி’ நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சிறந்த நீர் முகாமைத்துவ நிபுணரும் 1976 முதல் காலத்திற்கு காலம் மகாவலி திட்டத்துடன் இணைந்து செயற்பட்ட கலாநிதி எம்.யூ.ஏ.தென்னகோன் இந்நிகழ்வில் தலைமை உரையாற்றவுள்ளார்.

மேலும் அறிஞர்கள், கலைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மகாவலி, சுற்றாடல் துறைகளுடன் தொடர்புடைய தொழில் நிபுணர்கள் இவ்விழாவில் கலந்துகொள்வர்.

கருத்து தெரிவிக்க