உள்நாட்டு செய்திகள்

அரசுக்கு கைகொடுக்கிறது கூட்டமைப்பு! அலரிமாளிகை சந்திப்பில் இணக்கம்

” நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் சாதகமான முடிவொன்று எடுக்கப்படும்.” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உறுதியளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (08) மாலை அலரிமாளிகையில் நடைபெற்றது.

இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்குமாறு கூட்டமைப்பின் தலைவரிடம்,  பிரதமர் கோரிக்கை விடுத்தார்.

கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரத்துக்கு உடனடியாக தீர்வை வழங்கினால், அது குறித்து சாதகமாக பரீசிலிக்கலாம் என சம்பந்தன் பதிலளித்துள்ளார்.

இதையடுத்து கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தும் விடயம் குறித்துப் பேசப்பட்டது. இந்தப் பேச்சின்போது உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் பங்குபற்றினார்.

மேற்படி பிரசே செயலகம் தரம் உயர்வதாயின் அதற்கான நிதி அதிகாரமும், நிதிக் கையாள்கையும் உடன் வழங்கப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய சம்பந்தன், அப்பிரதேச செயலகத்துக்காக விசேடமாக நியமிக்கப்பட்ட கணக்காளர் இன்னும் அந்தச் செயலகத்தில் போயிருந்து பணியாற்றவில்லை என்பதை ஆட்சேபனையுடன் எடுத்தியம்பினர்.

சம்பந்தப்பட்ட கணக்காளரை இன்று செவ்வாய்க்கிழமை முதல் அந்தப் பிரதேச செயலகத்தில் போயிருந்து பணியாற்றுமாறு உத்தரவு பிறப்பித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்தப் பிரதேச செயலகத்துக்கான தனி வங்கிக் கணக்கு உட்பட தேவையான சகலவற்றையும் ஒரே நாளில் ஏற்படுத்திக் கொடுக்கவும் பணித்தார்.

இந்த தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றக்குழுவுடன் கலந்துரையாடிய பின்னர் சாதகமான முடிவை அறிவிப்பேன் என பிரதமரிடம், சம்பந்தன் உறுதியளித்துள்ளார்.

 

 

கருத்து தெரிவிக்க