உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

மட்டக்களப்பு விமான நிலையம் தரமுயர்த்தப்படும்- அர்ஜுன ரணதுங்க

மட்டக்களப்பு விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்துவது தொடர்பாக ஆராய்வதற்காக போக்குவரத்து சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நேற்று மாலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.

போக்குவரத்து சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் பிரதியமைச்சர் அசோக்க அபேசிங்க ஆகியோர் விஷேட விமானத்தில் மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு விஜயம் செய்தனர்.

இங்கு விஜயம் செய்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை மட்டக்களப்பு விமான நிலைய முகாமையாளர் இந்திக பொன்சேகா உட்பட விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.

அமைச்சர்களும் அதிகாரிகளும் மட்டக்களப்பு விமான நிலையத்தின் விமான ஓடு பாதை மற்றும் விமான நிலையம் என்பவற்றை சுற்றிப் பார்வையிட்டனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போக்குவரத்து சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மட்டக்களப்பு விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையத்தின் தரத்திற்கு தரம் உயர்த்துவது தொடர்பாக ஆராய்வதற்காக நாங்கள் இங்கு விஜயம் செய்தோம்.

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையத்திற்கு தரமுயர்த்துவதற்காக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பித்து வைத்து விட்டு மட்டக்களப்பு விமான நிலையத்துக்கும் வருகை தந்தோம்.

ஆகஸ்ட் முதல் வாரம் முதல் இந்தியாவை மையமாக கொண்டு சிவில் விமான சேவையை ஆரம்பிப்பதற்காக பலாலி விமான விமான நிலையத்தினை தரமுயர்த்தவுள்ளோம்.

இதனூடாக இந்தியாவின் மும்பை,ஹைதராபாத் , கொச்சின், பெங்களூர் போன்ற இடங்களுக்கு விமான சேவைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதே போன்று மட்டக்களப்பு விமான நிலையத்தினையும் தரமுயர்த்தி மட்டக்களப்பிலிருந்தும் இந்தியாவுக்கான விமான சேவைகளை நடாத்த முடியும். இதன் மூலம் சுற்றுலாத்துறையும் அபிவிருத்தி அடையும் என தெரிவித்தார்.

இதன் போது சிவில் விமானசேவைகள் நிறுவனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க உட்பட அதன் அதிகாரிகள் பலரும் வருகை தந்திருந்தனர்.

கருத்து தெரிவிக்க