உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

தேர்தலில் இணைந்து செயற்பட கோரிக்கைகளை முன்வைத்த இ.தொ.கா

நாட்டில் எதிர்வரும் வருடங்களில் இடம்பெறும் தேர்தல் ஒன்றில் பிரதான அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சுமார் 30 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

மலையகத்துக்கான முழுமையான பல்கலைக்கழகம் ஒன்றை நுவரெலியா மாவட்டத்தில் அமைத்தல், பெருந்தோட்டப் பிரதேசத்தில் மேலுமொரு கல்வியற் கல்லூரியை ஊவா மாகாணத்தில் அமைத்தல் என்பன உட்பட கல்வி, அரசியல், பொருளாதாரம், வாழ்வாதாரம் ஆகியவற்றை மையப்படுத்தியதாகவே மேற்படி கோரிக்கைகள் அமைந்துள்ளன.

எனவே, இவற்றை நிறைவேற்றுவதற்கு முன்வரும் தரப்புக்கே தேர்தலில் ஆதரவளிக்கப்படும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இன்று (03) அறிவித்தது.

கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் 03.07.2019 அன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இ.தொ.காவின் பொது செயலாளர் அனுஷா சிவராஜா இதனை தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் அதன் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி., தலைமையில் நேற்று கூடியது.

இதன்போது சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளன. இதன்போதே அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் வருமாறு,

முழுமையான பல்கலைக்கழகம் ஒன்றை நுவரெலியா மாவட்டத்தில் அமைத்தல். இது கடந்த காலங்களில் பல்வேறு மட்டங்களில் பேசப்பட்டிருந்தாலும் இதுவரையில் நடைமுறைக்கு வரவில்லை. ஆயினும், எதிர்காலத்தில் இவ்விடயத்திற்கு அதிகளவு முக்கியத்துவத்தைக் கொடுத்து செயற்படவுள்ளோம்.

•பெருந்தோட்டப் பிரதேசத்தில் மேலுமொரு கல்வியற் கல்லூரி ஒன்றை ஊவா மாகாணத்தில் அமைத்தல்.

• இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய கிளையை அட்டனில் அதற்காக ஒதுக்கப்பட்ட காணியில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

• பெருந்தோட்ட மக்கள் அதிகளவில் வாழுகின்ற 14 மாவட்டங்களில் உயர்தர விஞ்ஞான, வர்த்தப் பிரிவுகளை உள்ளடக்கிய பாடசாலைகளை தேவையானளவு உருவாக்குதல்.

• அரச தொழில்வாய்ப்பில் மிகவும் குறைந்தளவாக இருக்கின்ற இந்திய வம்சாவளி மக்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு ஒரு விசேட வேலைத்திட்டத்தை உறுதிப்படுத்தல்.

• பெருந்தோட்டங்களில் இயங்காதிருக்கின்ற தொழிற்சாலைகளை இளைஞர்இ யுவதிகளின் தொழில்வாய்ப்புக்காக மாற்றியமைத்தல்.

• பெருந்தோட்ட தொழிலாளர் சமூகத்தை சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக்குதல்.

• ஏற்கனவே அரசு பொறுப்பேற்றுள்ள தோட்ட வைத்தியசாலைகளை தரமுயர்த்துதலும் எஞ்சிய தோட்ட வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்றலும்.

• நுவரெலியா மாவட்ட கிளங்கன் ஆதார வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துதல்.

• ஆரம்ப சுகாதார மையங்களை பெருந்தோட்டங்களில் உருவாக்குதல்.

• நுவரெலியா மாவட்டத்தில் தற்போது ஐந்தாக (5) இருக்கின்ற பிரதேச செயலகங்களை பன்னிரண்டாக (12) அதிகரித்தல். இது கடந்த காலங்களில் பலமுறை வலியுறுத்தப்பட்டு வந்தாலும் இது வரையில் நடைமுறைக்கு வரவில்லை. இது தொடர்பில் முழுமையான அழுத்தத்தை கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

• மக்கட் தொகை அதிகளவிலுள்ள கிராம சேவகப் பிரிவுகளை சனத்தொகை அடிப்படையாகக் கொண்டு அதிகரித்தல்.

• தற்போதுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவு எல்லைகளை மீளமைத்தல்.

• நுவரெலியா மாவட்டத்தில் புதிய நகரசபைகளையும் மாநகர சபைகளையும் உருவாக்குதல்.

• அதிக மக்கட் தொகையையும் பாரிய நிலப் பிரதேசங்களையும் கொண்ட பிரதேச சபைகளை தேவைக்கேற்ப அதிகரித்தல். இதேவேளையில் நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, வலப்பனை, ஹங்குரான்கெத்த பிரதேச சபைகள் இரண்டாகப் பிரிக்கப்படல் வேண்டும்.

• புதிதாக உதவித் தொழில் ஆணையாளர் காரியலாயங்களை அமைப்பதுடன் தற்போதுள்ள தொழிற் காரியாலயங்களை தரம் உயர்த்துதலும்.

• பெருந்தோட்ட நிறுவனங்களால் பயன்படுத்தப்படாத (தரிசு) நிலத்தை தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு பகிர்ந்தளித்தல்.

• ஊவாஇ மத்திய மாகாணங்களில் இருக்கின்ற தமிழ்க் கல்வி அமைச்சுகளை மேலும் வலுப்படுத்தல்.

• பெருந்தோட்டப் பிரதேசங்களில் காலங்காலமாக தொழிலாளர் அனுபவித்து வரும் காணி உரித்தை உறுதிப்படுத்தி அரச காணி உறுதிப் பத்திரங்களை வழங்குதல்.

• வீதி போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தல் மற்றும் நுவரெலியா-கொழும்பு அதி வேக நெடுஞ்சாலையை அமைத்தல்.

• தொழினுட்பம் மற்றும் தொழிற் பயிற்சி நிலையங்களை பெருந்தோட்டப் பிரதேசங்களில் ஆரம்பித்தல்.

• பெருந்தோட்டப் பிரதேசங்களில் சிறுவர் கல்வி அபிவிருத்தி நிலையங்களை தாபித்தலும் வலுப்படுத்தலும்.

• பெருந்தோட்ட வீடமைப்பு வேலைத்திட்டத்தை முழுமையான கிராம அடிப்படையில் உருவாக்குதல்.

• தோட்டங்கள்தோறும் சனசமூக நிலையங்களை உருவாக்குதல்.

• நுவரெலியா மாவட்டத்தில் விவசாய பயிற்சிக் கல்லூரியை ஆரம்பித்தல்.

• பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்காக நுவரெலியா மாவட்டத்தில் விளையாட்டு பயிற்சி கட்டிட தொகுதி ஒன்றை அமைப்பதுடன், சர்வதேச தறத்திலான மைதானங்களை உறுவாக்கி தேசிய, சர்வதேச மட்டத்திற்கு தகுதியான விளையாட்டு வீரர்களை உறுவாக்குதல்.

• டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையுடன் இணைந்ததாக தாதியர் பயிற்சி கல்லூரி ஒன்றை உருவாக்குதல்.

• வறுமையை ஒழிப்பதற்கும் போசனை மட்டத்தை உயர்த்துவதற்கும் பெருந்தோட்டப் பிரதேசத்துக்கென விசேட வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தல் வேண்டும்.

• நுவரெலியா மாவட்டத்தில் விவசாய உற்பத்திகளை நவீனமுறையில் சந்தைப்படுத்துவதற்கான விசேட பொருளாதார மத்திய நிலையங்களை உருவாக்குதல்.

• பிரதேச வளங்களைப் பயன்படுத்தி சுய தொழில் வேலைவாய்ப்புத் திட்டங்களை உருவாக்கி இளைஞர், யுவதிகளின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுதல்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு மேலதிகமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கலந்துரையாடி வருகின்ற பல அரசியல் சமூக அமைப்புகளின் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் உள்வாங்க தயாராகவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க