யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் தமிழரசு கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு நடைபெற்றது. அதன் போது மண்டபத்தின் வெளியே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தமிழரசு கட்சியினர் மற்றும் மக்கள் இடையே கடுமையான வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுடன் இணைந்திருக்கும் அங்கஜன் இராமநாதன் மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பலரை குறிப்பிட்டு அங்கு சென்று காணாமல் போனோர் தொடர்பில் கேளுங்கள் என தமிழரசு கட்சியினர் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் நாங்கள் கூட்டமைப்புக்கே வாக்களித்தோம். கூட்டமைப்பே எங்கள் உறவுகளின் தகவல்களையும் அரசியல் கைதிகளின் விடுதலையையும் சாத்தியமாக்குவோம் என கூறி வாக்கு கேட்டார்கள். அவர்களே இதனை செய்ய வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூராட்சி சபைகளில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சி அமைத்தது கூட்டமைப்பே. அப்போது அவர்களுடன் கூடி குழாவி விட்டு தற்போது எங்களை அவர்களிடம் போங்கள் என அனுப்புகிறீர்களா ? என பதில் கேள்விகள் கேட்டுள்ளனர்.
இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மது போதையில் வந்தே போராட்டத்தில் ஈடுபட்டனர் என தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் சிலர் குற்றம் சுமத்தியமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் கொதி நிலையை ஏற்படுத்தி உள்ளது.
கருத்து தெரிவிக்க