உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘மரண தண்டனை’ – மைத்திரியிடம் விளக்கம் கோரியது ஐ.நா.!

இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் தீர்மானம் தொடர்பில் ஐ.நா. பொதுச்செயலாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கமளித்துள்ளார்.

இருவருக்குமிடையில் நேற்று முன்தினம் இரவு தொலைபேசி ஊடாகவே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28)  நடைபெற்ற நிகழ்வொன்றின்போது கருத்து வெளியிட்டார்.

” குற்றவாளிகள் நால்வருக்கு மரண தண்டனை  நிறைவேற்றப்படும்  என நேற்று முன்தினம் காலை நான் அறிவித்திருந்தேன். அன்றிரவு ஐ.நா. பொதுச்செயலாளர் எனக்கு அழைப்பை ஏற்படுத்தினார்.

என்னால் விடுக்கப்பட்ட அறிவிப்பு குறித்து வினவினார். இதற்கு நானும் பதில்களை வழங்கினேன்.

இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். பாடசாலை மாணவர்களும் இலக்குவைக்கப்படுகின்றனர். இதனால் சமூகம் சீரழியும் அபாயம் உள்ளது.

எனவேதான், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் உத்தரவில் கையொப்பமிட்டேன் என கூறினேன்.” என்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

 

கருத்து தெரிவிக்க