அரசியலில் அநாதையாக்கப்பட்டுள்ள வியாழேந்திரன் எம்.பி. இன்று இனவாத நாடகத்தை அரங்கேற்றிவருகின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினரான இம்ரான் மஹ்ரூப் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடப்பவை நாளை தமிழர்களுக்கும் அப்பகுதியில் நடைபெறும் என்பதை மறந்து கருத்துகளை அள்ளி வீசுகிறார் வியாழேந்திரன் எம்.பி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட அவர், அரசியல் சூழ்ச்சியின்போது கட்சி தாவினார். இன்று மஹிந்த பக்கமா, மைத்திரி பக்கமா என்றுகூட தெரியவில்லை. அரசியல் ரீதியில் அநாதையாக்கப்பட்டுள்ளார்.
எனவே, வாக்குகளை இலக்குவைத்து அவர் இனவாத அரசியலை நடத்துகிறார்.
இந்த நாட்டில் எதற்கு எடுத்தாலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகின்றது. இலங்கை கிரிக்கட் அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காகக்கூட நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் நிலையே காணப்படுகின்றது.
அதேவேளை, புனித குர்ஆனில் என்ன உள்ளது என்பது தெரியாமல் அது தொடர்பில் போலியான கருத்துகளை ரத்தன தேரர் வெளியிட்டுவருகின்றார். ” என்றார்.
கருத்து தெரிவிக்க