இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயம் சாத்தியப்படபோவதில்லை என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார்.
இன்று அவரது வவுனியா அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள் சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என பரவலாக உங்களினுடைய கட்சி உறுப்பினர்களே தெரிவித்திருக்கின்ற நிலைப்பாடு, அதனடிப்படையில் தமிழ் மக்களினுடைய உரிமையை அல்லது அரசியல் பெற்று கொள்ள இதுதான் சந்தர்ப்பமாக கருதப்படுகிறது என ஏனைய அரசியல் வாதிகளும் அதனை கூறியிருக்கிறார்கள். ஆகவே இந்த சந்தர்ப்பத்தை நீங்கள் நழுவ விட்டால் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் தமிழ் மக்களின் உரிமைகளையும் தீர்வையும் பெற்று கொள்வதற்கு கிடைக்குமா.? என கேட்டபோது,
எமது கட்சியாக இருக்கட்டும், தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருக்கட்டும் நாங்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கின்றோம் என்பது நூறு வீதம் தவறான ஒரு கருத்து.
இரண்டாவது நீங்கள் சொன்ன விடயம் இனப்பிரச்சினைக்கான தீர்வு இந்த தீர்வு விடயம் முடக்கப்பட்டுவிட்டது. இனிமேல் அது சாத்தியப்படப்போவதில்லை என்பது வெளிப்படையான ஒரு விடயமாகிவிட்டது.
இது எப்படி முடக்கப்பட்டது என்றால் மெல்ல மெல்ல இனவாதிகளால் இது தள்ளி தள்ளி கொண்டு செல்லப்பட்டு இறுதியாக இனவாதிகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒன்று சேர்ந்து விட்டார்.
தமிழர்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக வந்து தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்து அந்த அரங்கை நிறைவேற்றி முடித்துவிட்டார்.
எனவே இங்கு அது அல்ல பிரச்சினை. இந்த அரசுக்கு நாங்கள் ஆதரவானவர்களல்ல.
ஆனால் எமது தமிழ் மக்களுக்கு அநியாயம் செய்தவர்கள் எதிரானவர்கள் இன்னும் இன்னும் எத்தனையோ அராஜகங்களை செய்ய துடிப்பவர்களை இங்கு அரசாட்சிக்கு கொண்டு வரவிடாமல் தடுப்பதற்கான எமது நடவடிக்கையாக தான் இது இருப்பதாக வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க