லடாக்: கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் சீன ராணுவ கமாண்டிங் அதிகாரி உள்பட 2 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக சீனா ஒப்புதல் அளித்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறலில் ஈடுபட்ட சீன ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே கடந்த 15ம் தேதி இரவு மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கைகலப்பாக மாறியது. இதில் கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான பீகார் ரெஜ்மெண்டைச் சேர்ந்த படை வீரர்கள் 13 பேர் உள்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இந்த மோதலில் இந்தியாவைப் போல் சீனாவிலும் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 40 பேர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் உயிரிழப்பு குறித்த தகவல்களை சீனா வெளியிட மறுத்துவிட்டது. உயிரிழப்பு எண்ணிக்கை எவ்வளவு என்று வெளியிட்டால் இரு நாடுகளுக்கும் இடையே தேசிய உணர்வு எழுந்து பிரச்சனையை உருவாக்கும் என்றும் அதனால் தான் சீனா உயிரிழப்பு விவரத்தை வெளியிடுவதை தவிர்த்தவிட்டதாகவும் சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை கூறியிருந்தது.
இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் சீன ராணுவ கமாண்டிங் அதிகாரி உள்பட 2 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக சீனா முதல் முறையாக ஒப்புதல் அளித்துள்ளது. சீன அதிகாரிகள் தங்கள் அதிகாரிகளின் இறப்பு குறித்து இந்தியாவிற்கு அப்போதே தகவல் கொடுத்திருந்தனர், ஆனால் இது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக பிரபல ஆங்கில ஊடகம் ஜூன் 18ம் தேதி நாளிதழ் பதிப்பில் செய்தி சிறிய அளவில் வெளியிட்டு இருக்கிறது. அது இப்போது முதல்முறையாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கருத்து தெரிவிக்க