சீன அரசாங்கம் கொண்டு வந்துள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக கொங்கொங்கில் போராட்டம் நடத்தி வரும் ஜனநாயக ஆதரவாளர்கள், இதில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொங்கொங்கில் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பை மீறி, தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற சீன அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட வரைவையும் வெளியிட்டுள்ளது. இந்த சட்ட வரைவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொங்கொங் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. ஜனநாயக ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களாக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அவர்கள் இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, கொங்கொங்கில் வசிக்கும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ” சீன அரசாங்கம் கொண்டு வந்துள்ள சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது. இந்த சட்டமானது ஒரு நாடு, இரு அமைப்பு என்பதை நீக்குவதோடு மட்டுமல்லாமல், கொங்கொங்கின் தன்னாட்சி, மற்றும் நீதிச் சுதந்திரத்திற்கும் முடிவு கட்டுகிறது. இது போன்ற சட்டத்தை , சர்வதேச சமுகம் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக எதிர்க்க வேண்டும். கொங்கொங் விடயத்தில், சீனாவின் தலையீட்டிற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்காவிட்டால் அது அனைவருக்கும் பேரழிவாக இருக்கும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க