ஜோதிடம்

2024 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்

நிகழும் சோபகிருது வருடம் மார்கழி மாதம் 16-ம் நாள் திங்கள்கிழமை தேய்பிறை பஞ்சமி திதியில், கீழ்நோக்குடைய மகம் நட்சத்திரம், சிம்மம் ராசி, கன்னி லக்னத்தில், ப்ரீதி நாமயோகத்தில், கௌலவம் நாமகரணத்தில், மந்தயோகத்தில் நேத்திரம் 2, ஜீவன் 1 நிறைந்த நன்னாளில் நள்ளிரவு மணி 12.00-க்கு ஜனவரி 1-ம் தேதி 2024-ம் ஆண்டு பிறக்கிறது. (2+0+2+4=8) எண் 8-ல் வருவதால் மக்களிடையே போராட்ட குணம் அதிகமாகும். வீண் வதந்திகள், போலி விமர்சனங்களுக்காக போராட்டத்தில் ஈடுபடுவார்கள். வாட்ஸ் அப், பேஸ் புக், இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகமாகும். மக்கள் சமூக வலைதளங்களில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

லக்னாதிபதி புதன் பகவான் இந்த வருடம் பிறக்கும் போது வக்ரமாகி இருப்பதால் மொபைல் போன், டெலிவிஷன், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை குறையும். புதன் 3-ல் வக்ரமாகியிருப்பதனால் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் அதிகப்படியாக பரப்பப்படும். கம்ப்யூட்டர் வைரஸ் அதிகரிக்கும். பாக்யாதிபதி சுக்ரனுடன் புதன் இருப்பதனால் சந்திரமண்டலம் செவ்வாய் ஆகிய கிரகங்களுக்கு புதிய செயற்கைக் கோள் அனுப்பப்படும்.

9-க்கு உரிய சுக்ரனும், 10-க்கு உரிய புதனும் சேர்ந்து தர்மகர்மாதிபதி யோகமாகி இருப்பதால், சீரியல்கள், சினிமா, ரியாலிட்டி மற்றும் கிரியேடிவிட்டி ஷோ போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் புது கோணங்களில் ஒளிபரப்பப்படும்.

லக்னத்தில் கேது இருப்பதால் மதச் சண்டைகள் அதிகரிக்கும். ஒரு குறிப்பிட்ட மதம் பற்றிய விமர்சனங்கள் தவறாக பரப்பப்படும். தவறான அபிப்பிராய பேதங்கள் அதிகரித்து இன மதக் கலவரங்கள் உருவாகும்.

7-ல் ராகு இருப்பதால் காற்று மற்றும் நீர் மூலமாக நோய்கள் பரவி தொற்று நோய்கள் அதிகரிக்கும். 8-ல் குரு மறைந்திருப்பதால் மக்களிடையே நிம்மதி குறையும். நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கால் விபத்துகள் அதிகரிக்கும். செலவுகள் மக்கள் மத்தியில் அதிகரிக்கும்.

6-ம் இடத்தில் சனிபகவான் இருப்பதால் தொழிலாளர்களுக்கும், உழைக்கும் வர்க்கத்தினருக்கும், சாதாரண மக்களுக்கும் உரிய வாழ்க்கைத் தரம் உயரும். தொழிலாளர்களின் தினசரி ஊதியம் அதிகரிக்கும். முதலீட்டாளர்கள், முதலாளிகளுக்கு லாபம் குறையும். இருப்பினும் வேலை நிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டமும் ஆங்காங்கே அதிகரிக்கும்.

லக்னத்துக்கு 12-ம் இடத்தில் சந்திரன் இருப்பதால் மக்களுக்கு பயணங்களின் போது உடல் நலக்குறைவு அதிகரிக்கும். கப்பல், படகு மோதி தீப்பற்றி எரிவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால் எண்ணெய் கடலில் கலக்கும்.

4-ல் சூரியன், செவ்வாயும் நிற்பதால் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், கார் இவற்றின் விலைபாதிக்கு பாதியாக குறையும். அதில் புது தொழில்நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்படும். ஆனால் அதே நேரத்தில் வாகன விபத்து அதிகமாக ஏற்படும்.

கருத்து தெரிவிக்க