சீனாவின் முதலீட்டுடன் டயர் தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதற்கு 35 சதவீதமான இலங்கை இறப்பரை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இறப்பர் போன்ற முக்கிய ஏற்றுமதி விவசாயப்பயிர்கள் இங்கு உள்ளன. எனவே இறப்பருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
சிறு சிறு பிரச்சினைகள் உங்களுக்கு இருந்தாலும் அவை முக்கிய பிரச்சினை என்பது எனக்குத் தெரியும். எனது ஆட்சி காலத்தில் கிராமத்துக்கு ஒருவீடமைப்புத்திட்டம் என்ற அடிப்படையில் சுமார் 14000 வீட்டுத் திட்டங்கள் சத்தமில்லாமல் அமைத்தோம்.
ஆனால் கடந்த ஆட்சியில் சத்தம் மட்டுமே வந்தது. வீடுகள் கிடைக்கவில்லை. போஸ்டர்கள் மூலம் பல மடங்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் கட்டும் வீட்டுக்கு ஹம்பாந்தோட்டையில் போஸ்டர், கடைசியில் வீடும் இல்லை போஸ்டர் மட்டுமே. அவர்கள் போஸ்டர் கண்காட்சியை மட்டுமே நடத்தினர். நாம் செயலில் காட்டினோம்.
இலங்கை வரலாற்றில் கொங்கறீட் பாதை அமைப்பு , கார்பட் பாதை அமைப்பு என்ற இரு வேலைத்திட்டங்களையும் அறிமுகம் செய்தது எமது ஆட்சியிலேயேயாகும். 30 வருட யுத்தத்தை இரண்டரை வருடத்தில் முடித்தோம் என அவர் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க