ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் இன்றும் நாளையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.
நேற்றிரவு ஐதேமு பங்காளிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்த ஐதேகவின் பிரதி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட விரும்புபவருமான சஜித் பிரேமதாச இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
நேற்றிரவு நடந்த சந்திப்பின் போது, இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துப் பேசுவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது,
முன்னதாக, நேற்று கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சஜித் பிரேமதாசவிடம் இருந்து சந்திப்புக்கான அழைப்பு ஏதும் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்.
எனினும், நேற்றிரவு இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, ஐதேகவின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நாளை சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதை, இரா.சம்பந்தனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கருத்து தெரிவிக்க