22.54 கிராம் ஹெரோயின் விற்பனை செய்தமை தொடர்பில், ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை வழங்கியுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவினால், 27 வயதுடைய குறித்த நபருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி மட்டக்குளிய பகுதியில் வைத்து குற்றவாளியான ஹல்பிட்ட பதிரனகே நிஷாந்த உள்ளிட்ட 3 பேர், 51 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இன்று குறித்த நபர் வழக்கின் குற்றவாளியாக அறிக்கப்பட்ட போது பிரதிவாதி சார்ப்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி, அவருடைய வயது மற்றும் குற்றத்தின் தன்மையை அடிப்படையாக கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் குற்றவாளியான குறித்த நபர் பயணித்த முச்சக்கரவண்டியில் இருந்தே குறித்த ஹெரோயின் தொகை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதனூடாக அவர் ஹெரோயின் விற்பனைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை தெளிவாக தெரிவதாகவும் அதனால் அவருக்கு கடுமையான தண்டனை வழங்குமாறும் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
சமூகத்தை அழிக்கும் ஹெரோயின் வர்த்தகத்தை பாரிய குற்றமாக கருதி சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்கும் விதத்தில் அதிகபட்ச தண்டனை வழங்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கருத்துக்களை விசாரணை செய்த நீதிபதி சந்தேகநபருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க