இந்தியா

லடாக் எல்லையில் அதிரடி திருப்பம்.. திடீரென 2 கிமீ பின்வாங்கிய சீன ராணுவ படைகள்.. என்ன நடந்தது?

லடாக்: லடாக் எல்லையில் அதிரடி திருப்பமாக சீனா தற்போது கல்வான் பகுதியில் 2 கிமீ தூரத்திற்கு பின்வாங்கி உள்ளது. அங்கு இருக்கும் கட்டுமானங்களை சீனா தொடர்ந்து நீக்க தொடங்கி உள்ளது.

இந்தியா – சீனா இடையே லடாக் எல்லையில் கடந்த இரண்டு மாதமாக தீவிரமாக நடந்து வருகிறது. மே 5ம் தேதிதான் அதிகாரபூர்வமாக இந்த சண்டை தொடங்கியது. அதன்பின் கடந்த ஜூன் 16 -15 தேதிகளில் இந்த சண்டை விஸ்வரூபம் எடுத்தது.
அன்று நடந்த சண்டையில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். கல்வான் பகுதியில் இந்த சண்டை நடந்தது.

கால்வானில் இருக்கும் கட்டுப்பாட்டு பகுதி 14ல் இந்த சண்டை நடந்தது. இதை தொடர்ந்து கல்வான் பகுதியில் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை செய்தது. அதோடு பாங்காங் திசோ, டெப்சங் ஆகிய பகுதிகளிலும் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை செய்தது. அங்கு சீனா கட்டுமான பணிகளை செய்தது. அதேபோல் அதிக அளவில் வீரர்களையும் களமிறங்கியது. இதனால் அங்கே பதற்றம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

இதை தொடர்ந்து எல்லையில் தொடர்ந்து இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தை நடந்தது. மேஜர் லெவல், ஜெனரல் மேஜர் லெவல், லெப்டினன்ட் கர்னல் லெவல் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்தது.மொத்தம் 22 பேச்சுவார்த்தை கூட்டங்கள் நடந்தது. இதில் கடைசி கட்ட பேச்சுவார்த்தை மட்டும் கொஞ்சம் சுமுகமாக முடிந்தது. ஆனால் எந்த பேச்சுவார்த்தையிலும் முழுமையாக தீர்வு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது அதிரடியாக சீனா தற்போது கல்வான் பகுதியில் 2 கிமீ தூரத்திற்கு பின்வாங்கி உள்ளது. அங்கு இருக்கும் கட்டுமானங்களை சீனா தொடர்ந்து நீக்க தொடங்கி உள்ளது. இதற்கான சோதனையை தற்போது இந்திய படைகள் அங்கே செய்து வருகிறது . கால்வானில் சண்டை நடந்த 14வது கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து 2 கிமீ தூரத்திற்கு சீனாவின் படைகள் பின்வாங்கி இருப்பதாக கூறுகிறார்கள்.

கடைசியாக ஜூன் 30ம் தேதி இரண்டு நாடுகளுக்கும் இடையே லெப்டினன்ட் கர்னல் – மேஜர் ஜெனரல் மட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஏற்பட்ட உடன்படிக்கை மூலம் இப்படி சீனா படைகளை வாபஸ் வாங்குகிறது என்று கூறுகிறார்கள். இந்தியாவும் எல்லையில் தனது படைகளை குறைக்க தொடங்கி உள்ளது. சண்டை நடந்த பகுதிக்கு அருகே சீனா தனது படைகளை குறைக்க தொடங்கி உள்ளது என்று கூறுகிறார்கள்.

இதற்காக அங்கே கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த இடத்தை தாண்டி சீன வீரர்கள் வர கூடாது. அதை தாண்டி இந்திய வீரர்கள் செல்ல கூடாது என்று கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளது . வரும் நாட்களில் சண்டையை தடுக்கும் வகையில் இந்த பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ரோந்து பணிகள் நடந்து வருகிறது.

இன்னொரு பக்கம் கல்வான் நதி பகுதியில் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் அங்கே தண்ணீர் வர தொடங்கி உள்ளது. இங்கே வரும் தண்ணீர் அதிக ஐஸ் நிரம்பிய வெள்ளம் ஆகும். இங்குதான் சீனா ஆக்கிரமிப்புகளை செய்து இருக்கிறது. இதனால் அந்த குறிப்பிட்ட இடங்களில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். சரியான திட்டமிடல் இன்றி சீனா செய்த் ஆக்கிரமிப்பு அந்த நாட்டு ராணுவத்திற்கே சிக்கலாக மாறியுள்ளது.

கருத்து தெரிவிக்க